செய்திகள்
ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரெயில் -பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Published On 2020-12-28 06:30 GMT   |   Update On 2020-12-28 06:30 GMT
ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரெயில் இயக்கத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:

மெட்ரோ ரெயில்  சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில் சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமான இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

டிரைவர் இல்லாத ரெயில் இயக்கத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை நோக்கி இந்தியா எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை இந்த விழா காட்டுகிறது என்றார்.

மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த அட்டை வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும்.

டெல்லி  மெட்ரோ ரெயில்  நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ் பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்.
Tags:    

Similar News