செய்திகள்
மந்திரி சுதாகர்

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை: மந்திரி சுதாகர்

Published On 2020-12-22 01:57 GMT   |   Update On 2020-12-22 01:57 GMT
புதிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமை முகாமில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. நாளை (அதாவது இன்று) இரவு முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) இங்கிலாந்து விமானம் மூலம் 291 பயணிகள் பெங்களூரு வந்தனர். இதில் 138 பேர் கொரோனா பரிசோதனை சான்றிதழை வழங்கவில்லை.

இவர்களை ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் விமான நிலையங்களில் மருத்துவ குழு நியமிக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த புதிய வகை கொரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. ஆனால் நோய் தீவிரமாக இருப்பது இல்லை. அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கைவிட வேண்டும். சில ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட முன்பதிவு நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது.

கும்பலாக சேர்த்து புத்தாண்டு கொண்டாடினால் அத்தகைய ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். மக்களின் உடல் ஆரோக்கியமே அரசுக்கு முக்கியம். புதிய வகை கொரோனா பரவும்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கர்நாடகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும். புதிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை 7 நாட்கள் தனிமை முகாமில் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி நிலையங்களை திறப்பது குறித்து மீண்டும் ஒரு முறை நாங்கள் கூடி ஆலோசித்து முடிவு எடுப்போம். புதிய வைரஸ் குறித்து மக்கள் பயப்பட தேவை இல்லை. ஆனால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News