செய்திகள்
குழந்தை திருமணம்

பீகார், மேற்கு வங்காளம், திரிபுராவில் குழந்தை திருமணம் அதிகம் - தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தகவல்

Published On 2020-12-15 23:49 GMT   |   Update On 2020-12-15 23:49 GMT
நாட்டில் பீகார், மேற்கு வங்காளம், திரிபுராவில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கின்றன.
புதுடெல்லி:

நாட்டில் பீகார், மேற்கு வங்காளம், திரிபுராவில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதும், இந்த மாநிலங்களில் 40 சதவீத பெண்கள் உரிய வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துகொடுக்கப்படுவதும் புதிய தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கின்றன.

ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு, நாட்டில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. இதில் 6.1 லட்சம் மாதிரி குடும்பங்களில், மக்கள்தொகை, குடும்ப நலம், குடும்பக் கட்டுப்பாடு, சத்தான உணவு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.

17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பு தகவல்கள் முதலாவது கட்டமாக தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதன் விவரங்கள் வருமாறு:-

நாட்டில் அதிகபட்சமாக ஆந்திரா, அசாம், பீகார், திரிபுரா, மேற்கு வங்காள மாநிலங்களில் 15 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் திருமணமாகி குழந்தைக்குத் தாயாகியுள்ளனர் அல்லது கர்ப்பிணியாக உள்ளனர்.

பீகார், திரிபுரா, மேற்கு வங்காளத்தில்தான் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் அதிகபட்சமான பெண்கள் சட்டப்பூர்வ திருமண வயதான 18-ஐ எட்டும் முன்பே திருமணம் செய்துகொடுக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பீகார் (40.8 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது.

அசாம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும், தத்ரா- நாகர் ஹவேலி, டாமன்- டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சிறுவயது திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

பெண்களுடன் ஒப்பிடும்போது, ஆண்கள் சட்டப்பூர்வ திருமண வயதான 21-க்கு முன்பு திருமணம் செய்வது எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் குறைவாக இருக்கிறது. ஆண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் நடப்பது நாட்டிலேயே அசாமில்தான் (21.8 சதவீதம்) அதிகம். இந்தப் பட்டியலில், பீகார், குஜராத், திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும், லடாக் யூனியன் பிரதேசமும் அடுத்த இடங்களில் வருகின்றன.

தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பு விவரங்கள், இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News