செய்திகள்
ஹிம்கிரி போர்க்கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன போர்க்கப்பல் ஹிம்கிரி

Published On 2020-12-15 00:01 GMT   |   Update On 2020-12-15 00:01 GMT
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஹிம்கிரி' என்ற போர்க்கப்பல் கொல்கத்தா கப்பல் கட்டும் தளத்தில் தண்ணீரில் இறக்கி தொடங்கி வைக்கப்பட்டது.
கொல்கத்தா:

கடற்படைக்காக  17ஏ திட்டத்தின் கீழ் 7 நவீன போர்க்கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 4 கப்பல்களை மும்பை மசகான் கப்பல் கட்டும் தளத்திலும், 3 கப்பல்களை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (ஜிஆர்எஸ்இ) கப்பல் கட்டும் தளத்திலும் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது.

எதிரிகளின் ரேடாரில் சிக்காத தொழில்நுட்பத்துடன் இந்த போர்க்கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொல்கத்தா ஜிஎஸ்எஸ்இ கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் 'ஹிம்கிரி' ஹூக்ளி நதியில் இறக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரது மனைவி மதுலிகா ராவத், கடற்படை பாரம்பரியப்படி கப்பலை தொடங்கி வைத்தார்.

17ஏ திட்டத்தின் கீழ் இந்த கப்பல் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 80 சதவீத உபகரணங்கள் உள்நாட்டு நிறுவனங்களிடம் வாங்கப்படுபவை. இதன்மூலம் 2,000-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

தண்ணீரில் இறக்கப்பட்டுள்ள இந்த ஹிம்கிரி கப்பலில் உள் கட்டமைப்பு பணிகள், ஆயுதங்கள், நவீன கருவிகள் பொருத்தப்பட்டு 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெலிவரி செய்யப்படும். அதன்பின் இந்த போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News