செய்திகள்
சிடி ரவி

விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி: சி.டி.ரவி குற்றச்சாட்டு

Published On 2020-12-09 02:38 GMT   |   Update On 2020-12-09 02:38 GMT
விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு :

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும். அந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்துறை மந்திரியாக பணியாற்றிய சரத்பவார், விவசாய சீர்திருத்த சட்டங்களை ஆதரித்தார். கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெறும் கேரளாவில் வேளாண்மை சந்தைகளே இல்லை. ஆனாலும் இந்த வேளாண் சட்டங்களை கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். 

இது அவர்களின் அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை வேளாண் சந்தைகளில் மட்டுமே ஏன் விற்க வேண்டும். விவசாயத்துறையில் ஏன் போட்டி இருக்கக்கூடாது?. விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கக்கூடாதா?. விவசாயிகள் இடைத்தரகர்களின் பிடியிலேயே இருக்க வேண்டும் என்ற சதித்திட்டம் இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் கர்நாடகத்தில் சுமார் 5,000 விவசாயிகளும், தேசிய அளவில் 1 லட்சம் விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த தற்கொலைகளை தடுக்க வேண்டும், விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி இயற்றியுள்ளார். ஆனால் இதற்கு எதிராக விவசாயிகள் போராடுவது சரியல்ல. கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் 10.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு தலா ரூ.6,000 செலுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் இதில் 58 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பா அந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.4,000 வழங்குகிறார். கர்நாடக விவசாயிகளுக்கு ஆகமொத்தம் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் கிடைக்கிறது.

மண் பரிசோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மண் சுகாதார அடையாள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் எந்தெந்த பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை வழங்குகிறோம். விவசாயிகளை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இதற்கு சில பிரிவினைவாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
Tags:    

Similar News