செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

டெல்லி பேரணியால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து - சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

Published On 2020-12-05 00:06 GMT   |   Update On 2020-12-05 00:06 GMT
டெல்லியில் போராடும் விவசாயிகளால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது எனக்கூறி அவர்களை உடனே வெளியேற்ற உத்தரவிடும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு விவசாயிகளில் ஒரு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பு வலுத்தது.

இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி பேரணியாக திரண்டனர்.

இதற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ். தோமர் தலைமையில் கடந்த 1 மற்றும் 3-ம் தேதிகளில் அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.

இதனால், மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ரிஷப் சர்மா என்ற சட்ட மாணவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், டெல்லி எல்லை பகுதிகளில் போராடக்கூடிய விவசாயிகளால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது.  அதனால், அவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட வேண்டும். 

டெல்லியின் அனைத்து எல்லைகளையும் மத்திய அரசு உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் திறந்து விடுவதற்கு அவர்களுக்கு முறையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தனது மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களை மாற்ற வேண்டும். போராட்டம் நடைபெறும் இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றுவது, முக கவசம் அணிவது போன்ற தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News