செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.18000 கோடி ஒதுக்கீடு -நிதி மந்திரி அறிவிப்பு

Published On 2020-11-12 09:03 GMT   |   Update On 2020-11-12 09:03 GMT
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அன்னிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அக்டோபர் 1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24% பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும். மார்ச் 1 முதல் செப்டம்பர் 30  வரையிலான காலகட்டத்தில் பணியை இழந்தவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அன்னிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 3வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பும். அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொகை சுமார் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. 

39.7 லட்சம் வரி செலுத்துவோருக்கு வருமான வரி ரீபண்டாக 1,32,800 கோடி ரூபாய் சென்றுள்ளது. தற்போதுள்ள அவசர கடன் உத்தரவாத திட்டம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக 10 புதிய சாம்பியன் துறைகள் இப்போது உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வரும். இது பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 18,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News