ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சியை தடுத்தபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
பதிவு: நவம்பர் 08, 2020 15:27
எல்லை வேலி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் மச்சில் செக்டர் எல்லைப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றபோது, கட்டுப்பாட்டு எல்லையின் வேலி அருகில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தென்பட்டது. சற்று முன்னேறி சென்று பார்த்தபோது பயங்கரவாதிகள் சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றது தெரியவந்தது.
அவர்களை பாதுகாப்பு படையினர் இடைமறித்து திரும்பி போகும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் திரும்பி செல்லவில்லை. இதனையடுத்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர். இதனால் கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது.
விடிய விடிய நடந்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்பு படை தரப்பில் கேப்டன் மற்றும் 2 வீரர்கள் உயிரிழந்தனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.