செய்திகள்
சித்தராமையா

கர்நாடக அரசு திவாலாகி விட்டது: சித்தராமையா

Published On 2020-09-28 02:19 GMT   |   Update On 2020-09-28 02:19 GMT
ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளதால், கர்நாடக அரசு திவாலாகி விட்டது என்று சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடியை முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு முறைகேடு செய்துள்ளது. முறைகேடு நடக்கவில்லை என்று திரும்ப, திரும்ப சொல்வதால் உண்மையாகி விடும் என்று பா.ஜனதாவினர் நினைக்கின்றனர். கொரோனா காலத்திலும் நடந்த இந்த முறைகேட்டை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியின் பெயரை அரசு இழுத்துள்ளது. சட்டசபை கூட்டத்தொடரிலும் வன்முறையில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக மந்திரி மாதுசாமி கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா அரசு வந்த பின்பு மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை.

மாநிலத்தில் நிதி நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. கடனுக்கு மேல் கடன் வாங்கி, இந்த அரசு நடத்தப்படுகிறது. பா.ஜனதா அரசை ஆட்சியில் இருந்து விரட்டினால் மட்டுமே மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும். பொருளாதாரத்தில் மாநில அரசு திவாலாகி விட்டது. 15-வது நிதி ஆயோக சிபாரிசுபடி நிதி உதவியை மத்திய அரசிடம் இருந்து மாநில அரசால் பெற முடியவில்லை. மத்திய அரசிடம் நிதி உதவி பெறுவதற்கு மாநில அரசுக்கு தைரியம் இல்லை. மாநில அரசுக்கு தற்போது ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற சாத்தியமில்லை. விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்களை அமல்படுத்த கூடாது என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டசபையிலும் அந்த சட்ட திருத்தங்களை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் போராடியது. விவசாய சங்கங்கள் சார்பில் நாளை (அதாவது இன்று) நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News