செய்திகள்
ஹர்ஷவர்தன்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைய காரணம் என்ன?: ஹர்ஷவர்தன் விளக்கம்

Published On 2020-09-26 02:35 GMT   |   Update On 2020-09-26 04:11 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைய காரணம், நாட்டின் வலுவான சுகாதார அமைப்புதான் என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.
புதுடெல்லி :

டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கியதின் 65-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இறப்புவிகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இது இந்தியாவில் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி வரும் கட்டுப்பாட்டு உத்தியின் வெற்றியை நிருபித்து காட்டுகிறது.

நாம் கொரோனா பரிசோதனைத்திறனை வெற்றிகரமாக அதிகரித்து இருக்கிறோம். இன்று (நேற்று) கிட்டத்தட்ட சோதனை அளவு 15 லட்சம் என்ற மைல்கல்லை கிட்டத்தட்ட எட்டி உள்ளது. நாடு முழுவதும் 1,800-க்கும் மேற்பட்ட பரிசோதனைக்கூடங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் தடுப்பூசி துறையில் நடைபெற்று வரும் அறிவியல் முன்னேற்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா கூடுதலான வெற்றியை சாதித்துக்காட்டும்.

கொரோனா தொற்று காலத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் மாபெரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

நாட்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் உள்ள சுகாதார அமைப்பு நோய் அறிதல், சிகிச்சை வசதிகளை வழங்குவதோடு மட்டுமின்றி, இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், மீட்டெடுப்பதிலும் மிகுந்த செயல்திறனை காட்டி இருக்கிறது.

கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனிப்பதிலும், ஆராய்ச்சித்துறையில் புதுமைகளை உருவாக்குவதற்கும், நாடு முழுக்க உள்ள சக ஊழியர்களுக்கு வழிகாட்டுவதற்கும், கற்பித்தல் மற்றும் தகவல் தொடர்பில் புதிய வழிமுறைகளை உருவாக்குவதற்கும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மிகப்பெரிய பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளது.

எய்ம்சில் மாணவர் ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு மருத்துவ மாணவரின் கனவு ஆகும்.

இந்த 65-வது அண்டு நிறுவன நாளின்போது, நீங்கள் அனைவரும் இந்தியாவில் மருத்துவ சேவைகளை வலுப்படுத்துவதற்கும், சிறந்த அறிவியல் நாடுகளில் ஒன்றாய் இந்தியாவை நிலை நிறுத்துவதற்கும் உதவக்கூடிய சில யோசனைகளை தீவிரமாகவும், நுணுக்கமாகவும் கண்டறிந்து வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News