செய்திகள்
கோப்புப்படம்

முக கவசம் அணியாமல் காரில் தனியாக சென்ற வக்கீலுக்கு அபராதம் - எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2020-09-18 00:36 GMT   |   Update On 2020-09-18 00:36 GMT
முக கவசம் அணியாமல் காரில் தனியாக சென்ற வக்கீலுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் அந்த வக்கீல் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் சவுரப் சர்மா என்ற வக்கீல் கடந்த 9-ந் தேதி பணி நிமித்தமாக காரில் தனியாக சென்று கொண்டிருந்தார். அவர் முக கவசம் அணியாததால், தடுத்து நிறுத்திய போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த சவுரப் சர்மா டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:-

தனியாக காரில் பயணம் செய்கிறபோதும் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறும் எந்தவொரு நிர்வாக உத்தரவையும் போலீசார் வழங்க தவறினர். நான் தனியாக காரில் செல்வதை சலானில் சுட்டிக்காட்டவும், சட்டவிரோத அபராதத்தை எதிர்ப்பின் கீழ் செலுத்துவதாக குறிப்பிடவும் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

எனக்கு அபராதம் விதித்தது சட்டவிரோதம். அபராத தொகை ரூ.500-ஐ திருப்பி தரவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நவீன் சாவ்லா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குதாரர் தரப்பில் வக்கீல் கே.சி. மிட்டல் ஆஜராகி, காரில் தனியாக பயணிக்கிறபோது முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல என கூறும் சுகாதார அமைச்சக அறிவிக்கை இருப்பதாக கூறி வாதிட்டார்.

அந்த அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் பர்மன் அலி மாக்ரே, இப்படி ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து உறுதிபடுத்த வேண்டியது இருக்கிறது என கூறினார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் பதில் அளிக்க நோட்டீசு அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News