செய்திகள்
கொரோனா பரிசோதனை

நாடு முழுவதும் கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூருவுக்கு 3-வது இடம்

Published On 2020-09-15 02:24 GMT   |   Update On 2020-09-15 02:24 GMT
நாட்டிலேயே கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூரு 3-வது இடத்தில் இருக்கிறது. மற்ற நகரங்களை விட பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெங்களூருவில் நேற்று முன்தினம் கூட 3 ஆயிரத்து 479 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூரு 3-வது இடத்தில் உள்ளது. அதாவது பெங்களூருவில் நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரு நகரம் 3-வது இடத்தில் இருக்கிறது.

நாட்டிலேயே முதலிடத்தில் மராட்டிய மாநிலத்தின் புனே நகரம் உள்ளது. அந்த நகரத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 2-வது இடத்தில் டெல்லி இடம் பெற்றுள்ளது. டெல்லியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 304 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 4-வது இடத்தில் சென்னை இருக்கிறது.

அதே நேரத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒப்பிடும் போது புனே, டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களை காட்டிலும் பெங்களூருவில் குறைவாக இருக்கிறது. புனேயில் 4,813 பேரும், டெல்லியில் 4,744 பேரும், சென்னையில் 2,973 பேரும், பெங்களூருவில் 2,436 பேரும் கொரோனாவுக்கு உயிர் இழந்துள்ளனர். இதன்மூலம் பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை மற்ற நகரங்களை ஒப்பிடும் போது குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல, கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூரு 2-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 12-ந் தேதி வரை பெங்களூருவில் 40 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதிலும், முதலிடத்தில் புனே நகரம் இருக்கிறது. அங்கு 72 ஆயிரத்து 835 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 3-வது இடத்தில் உள்ள மும்பையில் 29 ஆயிரத்து 176 பேர் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News