செய்திகள்
வாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை

பெங்களூருவில் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை: மாநகராட்சி அறிவிப்பு

Published On 2020-08-27 02:50 GMT   |   Update On 2020-08-27 02:50 GMT
பெங்களூருவில் தனி நபராக சென்றால் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க மாநகராட்சி சார்பில் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மார்ஷல்கள் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

சில நேரங்களில் மார்ஷல்களுடன் சேர்ந்து போலீசாரும் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், முக கவசம் அணியவதில் இருந்து வாகன ஓட்டிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, வாகன ஓட்டிகள் முக கவசம் அணிவதில் சில தளர்வுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒருவர் மட்டும் சென்றால் முக கவசம் அணிய தேவையில்லை. அவர்கள் முக கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி செல்லலாம். அதே நேரத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் யாராவது அமர்ந்திருந்தால், 2 பேரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

அதுபோல, காரில் டிரைவருடன், பிற பயணிகள் இருந்தால் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News