செய்திகள்
கொரோனா மருத்துவமனை

பீகாரில் தலா 500 படுக்கைகளுடன் 2 கொரோனா மருத்துவமனைகள் - ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் அமைப்பு

Published On 2020-08-24 19:02 GMT   |   Update On 2020-08-24 19:02 GMT
பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து பீகாரில் தலா 500 படுக்கைகளுடன் கூடிய 2 தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.
புதுடெல்லி:

இந்தியாவின் மொத்த கொரோனா நோயாளிகளில் 80 சதவீதத்தினரை 10 மாநிலங்கள் கொண்டிருக்கின்றன. இந்த மாநிலங்களில் வைரசை கட்டுப்படுத்தினால் ஒட்டுமொத்த நாட்டிலும் கொரோனாவை வெல்ல முடியும் என சமீபத்தில் பிரதமர் மோடியே கூறியிருந்தார்.

இந்த 10 மாநிலங்களில் பீகாரும் ஒன்று. விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் 2 தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் அமைக்கப்படும் இந்த மருத்துவமனைகளை ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) அமைக்கிறது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் நேற்று அடுத்தடுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

பீகாரின் பாட்னா மற்றும் முசாபர்பூரில் 500 படுக்கை மருத்துவமனைகளை டி.ஆர்.டி.ஓ. மூலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்க பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதில் பாட்னாவின் பிடாவில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவமனை இன்று (நேற்று) திறக்கப்படும் நிலையில், முசாபர்பூரில் அமைக்கப்படும் மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்.

இந்த மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய தலா 125 அவசர சிகிச்சை படுக்கைகள், 375 சாதாரண படுக்கைகள் இருக்கும். ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டிருக்கும். இந்த மருத்துவமனைகளுக்கான டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை ஆயுதப்படையின் மருத்துவ சேவைகள் குழு வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News