செய்திகள்
திமுக எம்பி, கனிமொழி

ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு கனிமொழி கடிதம்

Published On 2020-08-22 11:28 GMT   |   Update On 2020-08-22 11:28 GMT
இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி கடந்த 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உள்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரியுள்ளனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது. இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என ராஜேஷ் கொடேஜா தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே, இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்  எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலரின் கருத்துக்கு  திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டரில், மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ளப் போகிறோம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சக மந்திரி ஸ்ரீபாட் நாயக்கிற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். மேலும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News