செய்திகள்
கர்நாடகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு உடற்பயிற்சி, யோகா மையங்கள் திறப்பு

கர்நாடகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு உடற்பயிற்சி, யோகா மையங்கள் திறப்பு

Published On 2020-08-06 03:42 GMT   |   Update On 2020-08-06 03:42 GMT
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 4 மாதங்களுக்கு பின்பு உடற்பயிற்சி, யோகா மையங்கள் நேற்று திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாலிபர்கள் பயிற்சி செய்தனர்.
பெங்களூரு :

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து உடற்பயிற்சி மற்றும் யோகா மையங்கள் திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்படாமல் மூடியே கிடந்தன. இதன் காரணமாக வாடகை கொடுக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறினார்கள். பெங்களூருவில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ளதால், உடற்பயிற்சி, யோகா மையங்கள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் அனுமதி கேட்டனர். இறுதியில் மத்திய அரசே சில வழிகாட்டுதல்களின்படி ஆகஸ்டு 5-ந் தேதி முதல் (அதாவது நேற்று) உடற்பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து, கடந்த 4 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த உடற்பயிற்சி மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. மையங்களில் இருந்த உபகரணங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று காலையில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் யோகா மையங்கள் திறக்கப்பட்டன. வாலிபர்கள் ஆர்வமாக அதிகாலையிலேயே வந்து உடற்பயிற்சி செய்தார்கள். சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்து கொண்டும் சிலர் உடற்பயிற்சி செய்தார்கள். உடற்பயிற்சி மையங்களுக்கு வந்தவர்கள் தங்களது கைகளை கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்த பின்பு உள்ளே சென்று பயிற்சி செய்தார்கள். அதுபோல, யோகா மையங்களிலும் நேற்று காலையில் கூட்டம் இருந்தது. ஆண்கள், பெண்கள் வந்து யோகா பயிற்சி செய்தார்கள். உடற்பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி அளித்ததற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News