செய்திகள்
சச்சின் பைலட்

சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை- ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-07-24 06:32 GMT   |   Update On 2020-07-24 07:22 GMT
சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான்:

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால், அவரது துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின் பேரில், 19 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து அவர்கள் 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது.

இந்த வழக்கு கடந்த 21-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரும் 24ம் தேதி வரை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 24-ந்தேதி (இன்று) இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இறுதி தீர்ப்பு வழங்கக்கூடாது என சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடலாம் என தெரிவித்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தனர்.

மேலும் இவ்விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News