செய்திகள்
உத்தவ் தாக்கரே

பிறந்தநாளை நான் கொண்டாடமாட்டேன்... போஸ்டர்,பேனர் வேண்டாம்... பிளாஸ்மா தானம் செய்யுங்கள் - உத்தவ் தாக்கரே

Published On 2020-07-23 20:05 GMT   |   Update On 2020-07-23 20:09 GMT
இந்த வருடம் பிறந்தநாளை தான் கொண்டாடமாட்டேன் எனவும், தொண்டர்கள் போஸ்டர், பேனர் என எதுவும் ஏற்பாடு செய்யாமல் பிளாஸ்மா மற்றும் ரத்ததான முகாம்களை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிர மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே 1960 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்தார். சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்கரேவின்
பிறந்தநாளை அக்கட்சி தொண்டர்கள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். 

போஸ்டர்கள், பேனர்கள், கலைநிகழ்ச்சிகள் என ஆண்டுதோறும் உத்தவின் பிறந்தநாளில் மகாராஷ்டிரா முழுவதும் விழாக்கோலமாக இருக்கும்.

இதற்கிடையில் உத்தவ் தாக்கரேவின் 60-வது பிறந்தநாள் வரும் திங்கள் கிழமை வர உள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என உத்தவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வருடம் எனது 60-வது பிறந்தநாளை நான் கொண்டாடமாட்டேன். எனது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்க யாரும் என் வீட்டிற்கு வரவேண்டாம். 

போஸ்டர்கள், பேனர்கள் இருக்கக்கூடாது. தொண்டர்கள் கூட்டமும் இருக்கக்கூடாது. அலங்காரங்களுக்கு செலவிடுவதை விட அந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள். கொரோனா வைரசை 
எதிர்த்து போரிட இந்த நிதி பயன்படுத்தப்படும். 

மக்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா தானம், ரத்ததானம் மற்றும் சுகாதார மையங்களை ஏற்பாடு செய்யுங்கள் என தனது தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
Tags:    

Similar News