செய்திகள்
உத்தவ் தாக்கரே

ராமர் கோவில் பூமி பூஜைக்கு உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு: அறக்கட்டளை நிர்வாகம் தகவல்

Published On 2020-07-21 03:30 GMT   |   Update On 2020-07-21 03:30 GMT
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்க உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அயோத்தி :

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை ஆகஸ்டு 5-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, யார் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற விவரத்தை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான அனில் மிஸ்ரா நேற்று தெரிவித்தார். அந்த பட்டியலில் ஆச்சரியத்தை அளிக்கக்கூடிய ஒருவரது பெயர் இடம்பெற்றுள்ளது. அவர், மராட்டிய மாநில முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே ஆவார்.

அவர் தற்போது எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கிறார். அவரது கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார், இந்த பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ராமர் கோவில் இயக்கத்துக்கு உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தாக்கரே ஆற்றிய பணிக்காக உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக அனில் மிஸ்ரா கூறினார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் பால் தாக்கரே பெயரும் இருந்தது.

மேலும், முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு, உத்தவ் தாக்கரே, தனது குடும்பத்தினர் மற்றும் மந்திரிகளுடன் அயோத்திக்கு சென்றிருந்தார். ராமர் கோவில் கட்ட தாராளமாக நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், அவர் இந்த அழைப்பை ஏற்று அயோத்திக்கு செல்வாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா மேலும் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட சுமார் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும்.

பூமி பூஜை, காலையிலேயே தொடங்கும். இருப்பினும், பிரதமர் மோடி பிற்பகலில்தான் பங்கேற்பார். பகல் 12 மணிக்கு அவர் அயோத்திக்கு வந்து சேருவார். 3 மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு நிகழ்ச்சிக்கு வருவார்.

5 கோள்களை குறிக்கும் வகையில், 5 வெள்ளி செங்கற்களை உருவாக்கி உள்ளோம். அதில் ஒரு வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி எடுத்து வைக்க, காசியை சேர்ந்த 5 பிராமணர்கள் பூமி பூஜையை நடத்துவார்கள். யோகி ஆதித்யநாத் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேர், தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

விஷ்ணு கோவில் பாணியில் கோவில் இருக்கும். கர்ப்பகிரகம், எண்கோண வடிவத்தில் இருக்கும். கோவிலின் அடிப்படை வடிவமைப்பு, கட்டுமான வடிவம் ஆகியவை விசுவ இந்து பரிஷத் ஏற்கனவே அங்கீகரித்தவை தான்.

இருப்பினும், கோவில் பரப்பளவு, முன்பு முடிவு செய்ததுபோல் 38 ஆயிரம் சதுர அடிக்கு பதிலாக 76 ஆயிரம் முதல் 84 ஆயிரம் சதுரஅடிவரை அமையும்.

அதுபோல், கோவிலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News