செய்திகள்
பிரதமர் மோடி

தமிழகம் உள்பட ஏழு மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Published On 2020-07-19 17:45 GMT   |   Update On 2020-07-19 17:45 GMT
தமிழகம் உள்பட 7 மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவியிருக்கும் நிலையில், தமிழகம் உள்பட 7 மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.  பீகார், அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழகம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில முதல் மந்திரிகளுடன் பேசிய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால், இந்த மாநிலங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பிரதமர் மோடி வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் இந்த இரு மாநில முதல் மந்திரிகளுடன் கேட்டறிந்தார்.

அஸ்ஸாமில் கனமழை காரணமாக 26 மாவட்டங்களில் உள்ள 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 1.18 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் கனமழையால் நீரில் மூழ்கின.  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 48 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 79 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி இன்று பேசிய 7 மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.  நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அஸ்ஸாம், பீகார், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News