செய்திகள்
கோப்பு படம்

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 86 சதவிகிதம் 10 மாநிலங்களில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சகம்

Published On 2020-07-14 12:22 GMT   |   Update On 2020-07-14 12:22 GMT
இந்தியாவின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பில் 86 சதவிகிதம் 10 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் 50 சதவிகிதம் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன் படி, புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறையின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன் பேசியதாவது:-

இந்தியாவின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பில் 86 சதவிகிதம் 10 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டவர்கள். அதில் 50 சதவிகிதம் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உறுதி செய்யப்பட்டவர்கள். எஞ்சிய 36 சதவிகிதம் 8 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 63 சதவிகிதமாக உள்ளது. நாட்டின் 20 மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிக குணமடைந்தோர் விகிதத்தை கொண்டுள்ளது.

அதிலும், குஜராத் (70%) ஒடிசா (67%) அசாம் (65%) தமிழ்நாடு (65%) உத்தரபிரதேசம் (64%) ஆகிய மாநிலங்கள் அதிக குணம்டைந்தோர் விகித்தை கொண்டுள்ளது.

வைரசுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் விகிதம் 1.8 மடங்கு அதிகமாக உள்ளது.

சராசரியாக 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிசோதனை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்கள் சராசரியாக 10 லட்சம் பேரில் 140 அல்லது அதற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறது. 

எஞ்சிய மாநிலங்களும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை அடிப்படையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.   

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News