செய்திகள்
அமித்ஷா

பிரதமரின் லடாக் பயணம் வீரர்களின் மன உறுதியை உயர்த்தும்- அமித்ஷா பாராட்டு

Published On 2020-07-04 01:35 GMT   |   Update On 2020-07-04 01:35 GMT
பிரதமர் மோடியின் லடாக் பயணம் ராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் என அமித்ஷா பாராட்டி உள்ளார்.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே கடந்த மாதம் 15-ந்தேதி ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. எனினும் அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி லடாக் எல்லைக்கு நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு எல்லையை பாதுகாத்து வரும் வீரர்களை சந்தித்து உரையாடிய மோடி, அவர்களின் துணிச்சலை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

பிரதமரின் இந்த பயணம் நாடு முழுவதும் பாராட்டு பெற்று வருகிறது. அந்தவகையில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் பிரதமரை வெகுவாக பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘தலைமையேற்று முன்னால் செல்கிறார். துணிச்சலும், தைரியமும் மிகுந்த நமது ராணுவம், விமானப்படை மற்றும் இந்தோ-திபெத் படையினருடன் லடாக் எல்லையில் பிரதமர் நரேந்திர மோடிஜி. மாண்புமிக்க பிரதமரின் இந்த பயணம் நமது வீரர்களின் மன உறுதியை நிச்சயம் உயர்த்தும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் பிரதமரின் லடாக் பயணம் தொடர்பான ஏராளமான படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்த அவர், ‘லேயில் மோடி’ என்ற ஹாஷ்டாக்கை பயன்படுத்தி இந்த பதிவுகளை வெளியிட்டு இருந்தார்.

இதைப்போல பிரதமரின் லடாக் பயணத்துக்கு பா.ஜனதாவும் பாராட்டு தெரிவித்து உள்ளது. லடாக்கில் ராணுவ வீரர்களிடம் மோடி பேசிய உரையை சுட்டிக்காட்டி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறும்போது, ‘துணிச்சல் மிகுந்தவர்கள் இந்த பூமியை சொந்தமாக்கிக் கொள்வார்கள். பிரதமர் மோடியின் வார்த்தைகள் 130 கோடி இந்தியர்களின் உணர்வுக்கு வார்த்தைகளை அளிக்கிறது. அத்துடன் நமது ஆயுதப்படையினருக்கு மிகுந்த மன உறுதியையும் அளித்திருக்கிறது. செயலில் உண்மையான தலைமைத்துவம்’ என்று தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News