செய்திகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவுக்கு எதிரான போரில் கைகொடுக்கும் 5 ஆயுதங்கள் -அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2020-06-27 10:39 GMT   |   Update On 2020-06-27 10:39 GMT
டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான போரில் அதிகாரிகள் 5 வகையான ஆயுதங்களை பயன்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் 5 ஆயுதங்கள் உதவுவதாக கூறினார்.

‘மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பிளாஸ்மா சிகிச்சை, கணக்கெடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் ஆகியவை இந்த தொற்று நோயை சமாளிக்க உதவியாக உள்ளன. 

கடந்த ஒரு வாரத்தில், படுக்கை வசதிகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 13500 படுக்கைகளில் தற்போது வரை 6500 படுக்கைகள் நிரம்பி உள்ளன. தினமும் 20000 சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா நோயாளிகளுக்காக 4000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கி உள்ளோம். தேவையான பரிசோதனைக் கருவிகளை வழங்கி உதவி செய்யும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் இதுவரை 77240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2492 பேர் உயிரிழந்துள்ளனர். 47091 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News