செய்திகள்
டெக்ஸமெதோசான் மருந்துகள்

ரூ.10க்கு கொரோனா பாதிப்பில் இருந்து உயிர் காக்கும் மருந்து

Published On 2020-06-17 11:11 GMT   |   Update On 2020-06-17 11:11 GMT
ரூ.10க்கு கொரோனா பாதிப்பில் இருந்து உயிர் காக்கும் மருந்து இந்தியாவில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 81 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,40,390 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் திணறி வருகின்றனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இது மலிவாகவும் கிடைக்கும் என கூறி உள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலின் நோய் எதிர்ப்பு கொரோனா நோயை எதிர்த்து போரிடும்போது உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குணப்படுத்த இந்த டெக்ஸமெதோசான் பயன்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான சவுமியா சுவாமிநாதன், உயிர் காக்கும் மருந்தாக ஆய்வுகளில் கண்டறியப்பட்ட டெக்ஸமெதோசான் மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

எனினும், லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்ஸமெதோசானை தயாரிப்பதால் ரூ.10 விலையில், 10 மில்லி மருந்து கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News