செய்திகள்
தேவேகவுடா

மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா போட்டி?: இன்று முடிவை அறிவிக்கிறார்

Published On 2020-06-08 03:46 GMT   |   Update On 2020-06-08 03:46 GMT
மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அவர் இன்று(திங்கட்கிழமை) தனது முடிவை அறிவிக்கிறார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 4 இடங்களில் பா.ஜனதாவுக்கு 2, காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. 4-வது இடத்தில் வெற்றி பெற எந்த கட்சியிடமும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லை.

ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அக்கட்சிக்கு இன்னும் 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தால், 4-வது இடத்தில் வெற்றி பெற முடியும். அந்த 4-வது இடத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா போட்டியிட்டால், அவரை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களும், தேவேகவுடா மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தேவேகவுடா கூறினார். ஆனால் காங்கிரசாரின் வற்புறுத்தலின்பேரில், துமகூரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தன்னை தேர்தலில் நிற்க வைத்து காங்கிரசார் தோற்கடித்துவிட்டனர் என்று அவர் வெளிப்படையாகவே கூறினார்.

கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் அழுத்தம் கொடுப்பதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து தேவேகவுடா ஆலோசனையில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்பதால், வெற்றி பெறுவது எளிது. அதனால் தேவேகவுடா தனது மனநிலையை மாற்றிக் கொண்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) தனது முடிவை அறிவிக்க உள்ளார். ஏனென்றால் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News