செய்திகள்
சித்தராமையா

எடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா

Published On 2020-06-04 04:13 GMT   |   Update On 2020-06-04 04:13 GMT
கர்நாடக பா.ஜனதாவில் அதிருப்தி இருப்பது உண்மை தான் என்றும், எடியூரப்பா தலைமையிலான அரசு தானாகவே கவிழும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கொப்பலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான்(சித்தராமையா) முதல்-மந்திரியாக இருந்தபோது அரசின் நிதி நிலையை சீர்குலைத்ததாக வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கூறியுள்ளார். அவருக்கு நிதி நிலை பற்றிய அறிவு குறைவு. எனது ஆட்சி காலத்தில் நிதி நிலையை நிர்வகிப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் இருந்தது. அரசியலுக்காக வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். சோமண்ணா பொருளாதார நிபுணரா?.

கர்நாடக அரசின் நிதி நிலை திவாலாகிவிட்டது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி இல்லை. இது கர்நாடகத்தின் கதை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையும் இவ்வாறு தான் உள்ளது. கொரோனா வருவதற்கு முன்பே மாநில அரசு திவால் நிலையில் தான் இருந்தது. சோமண்ணாவுக்கு கலாசாரம் தெரியவில்லை. பா.ஜனதாவினரை போல் நான் தரம் தாழ்ந்து பேச விரும்பவில்லை.

எனக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது. எங்களிடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்று வெளியாகும் தகவல் பொய். முன்எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் கொரோனா வராது. அதுபற்றி அனைவரும் சரியான முறையில் தெரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

கர்நாடக பா.ஜனதாவில் அதிருப்தி இருப்பது உண்மை தான். இந்த அதிருப்தி தொடர்ந்து இருக்கும். அவர்களின் உள்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். பா.ஜனதா அரசு தானாகவே கவிழும். அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா முதல்-மந்திரியை போல் செயல்படுவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். நாங்கள் அவ்வாறு கூறவில்லை.

எடியூரப்பா பெயருக்கு மட்டுமே முதல்-மந்திரி. மற்ற அனைத்து விஷயங்களையும் விஜயேந்திரா தான் கவனிக்கிறார். பா.ஜனதாவை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் என்னை சந்தித்து, தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கொரோனா பெயரில் கிராம பஞ்சாயத்து தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மேலும் நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளோம். பா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News