செய்திகள்
விமான சேவை

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்

Published On 2020-05-21 05:15 GMT   |   Update On 2020-05-21 05:15 GMT
உள்நாட்டு விமான சேவை 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயணிகளுக்கான நடைமுறைகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் மே 25 ஆம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார். 

முதற்கட்டமாக குறைவான எண்ணிக்கையில் விமான சேவைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. அனைத்து விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானங்களை இயக்க விமான நிறுவனங்களும், விமான நிலையங்களும் தயாராகி வருகின்றன. உடலை தொடாமல் சோதனை செய்யும் நடைமுறை, உணவு வழங்கும் பகுதிகளில் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை செயல்படுத்த உள்ளன. 

இந்நிலையில், விமான பயணிகளுக்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான இயக்க நடைமுறைகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

அதில், ‘விமான நிலைய முனைய கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகள் கட்டாயமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் தெர்மல் ஸ்கிரீனிங் பாதை வழியாக  செல்ல வேண்டும். அனைவரும் தங்கள் மொபைல்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அது தேவையில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான விமான நிலையங்களில் இருந்து அவசர கால தேவைக்கான சரக்கு விமானங்கள் இயக்கப்படுகினன். மேலும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News