செய்திகள்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

மே 17-க்கு பிறகு என்ன செய்யலாம்? மக்களிடம் கருத்து கேட்கும் டெல்லி முதல்வர்

Published On 2020-05-12 07:23 GMT   |   Update On 2020-05-12 07:23 GMT
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மே 17-ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. 

எனவே, மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கிக்கொள்ளப்படுமா? என்பது குறித்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மே 17-ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்ன தேவை? என்பது தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி மக்கள் மே 17-க்குப் பிறகு என்ன செய்யலாம் என்பது பற்றி தங்கள் ஆலோசனைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆலோசனைகளை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும். தகவல் அனுப்ப வேண்டிய எண்கள்: 1031, வாட்ஸ்அப் எண். 8800007722. மேலும் delhicm.suggestions@gmail.com இன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்’ என்றார்.

டெல்லியில் 7639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 86 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News