செய்திகள்
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்

குல்பூஷண் ஜாதவ் விடுதலைக்கு மீண்டும் சர்வதேச கோர்ட்டை அணுகவேண்டும் - மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே

Published On 2020-05-04 12:59 GMT   |   Update On 2020-05-04 12:59 GMT
குல்பூஷண் ஜாதவ் விடுதலைக்காக மீண்டும் சர்வதேச கோர்ட்டை அணுகவேண்டும் என மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (வயது 49), தங்கள் நாட்டில் உளவு வேலை பார்த்ததாக கூறி கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த விவகாரத்தை இந்தியா, திஹேக் (நெதர்லாந்து) நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றது. குல்பூஷண் ஜாதவுக்காக இந்திய அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே வாதாடினார்.



இந்த வழக்கில் வாதாட இந்திய அரசிடம் இருந்து அவர் பெற்றது வெறும் ஒரு ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, கடந்த ஆண்டு ஜூலை 18-ந் தேதி குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. மேலும் இந்த தண்டனை தொடர்பாக மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு பிறகும் பாகிஸ்தான் இவரை விடுதலை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். கீழ் இயங்கும் அகில பாரதீய ஆதிவக்தா பரிஷத் என்ற அமைப்பு காணொலி மூலம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் லண்டனில் இருந்து பங்கேற்ற மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே கூறியதாவது:-

சர்வதேச கோர்ட்டு குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள நிலையில் பாகிஸ்தான் இந்த வழக்கை மறுஆய்வு செய்வது குறித்தும் அவரை விடுவிப்பது குறித்தும் இந்தியா பலமுறை கடிதங்கள் எழுதியபோதும் பாகிஸ்தான் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது.

மனிதாபிமான அடிப்படையோ வேறு எதுவோ நாம் அவரை மீட்டுக் கொண்டு வரவே விரும்புகிறோம். இது பாகிஸ்தானுக்கு பெரிய கவுரவ பிரச்சினையாக அமைந்து விட்டது போல தோன்றுகிறது.

எனவேதான் அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுக்கிறது. சர்வதேச கோர்ட்டின் தீர்ப்புக்கு பிறகும் குல்பூஷண் ஜாதவை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிடிவாதமாக இருக்கிறது.

இதுகுறித்து இந்தியா 4 அல்லது 5 கடிதங்களை எழுதிவிட்டது. ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள் .நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் சர்வதேச கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பாகிஸ்தான் எப்படி செயல்படுத்தப் போகிறது என்பது குறித்துத்தான்.

எனவே குல்பூஷண் ஜாதவை விடுவிக்கும் வகையில் தற்போது நாம் சர்வதேச கோர்ட்டுக்கு இந்த விவகாரத்தை மீண்டும் எடுத்துச் செல்வது குறித்து யோசிக்க வேண்டிய கட்டத்தை அடைந்து இருக்கிறோம்.

இவ்வாறு ஹரிஷ் சால்வே கூறினார்.
Tags:    

Similar News