செய்திகள்
முதியவரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற காட்சி.

தனிமை முகாமில் இருந்து தப்பி 17 கிலோ மீட்டர் நடந்து வீட்டுக்கு சென்ற முதியவர்

Published On 2020-04-29 09:17 GMT   |   Update On 2020-04-29 09:17 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் தனிமை முகாமில் இருந்து தப்பிச் சென்ற முதியவர், 17 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீட்டுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புனே:

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி 9318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில், புனேயின் பாலேவாடி பகுதியில் உள்ள தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது கொரோனா நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து 17 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, யர்வாடாவில் உள்ள தனது வீட்டை அடைந்துள்ளார். 

அவரது குடும்பத்தில் உள்ளவர்களில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் தனிமை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதால் வீடு பூட்டியிருந்தது. 

வீட்டிற்கு வெளியே அவர் தனியாக இருந்ததைக் கவனித்த அப்பகுதி மக்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உள்ளூர் பிரமுகர் ஒருவர் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தார். இதனையடுத்து அந்த முதியவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் தனிமை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சரியாக உணவு வழங்காததாலும், சுத்தமான குளியலறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததாலும் தனிமை முகாமில் இருந்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News