செய்திகள்
கோப்புபடம்

ஒடிசா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சம் வழங்கிய ஹாக்கி இந்தியா

Published On 2020-04-09 08:47 GMT   |   Update On 2020-04-09 08:47 GMT
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில், ஒடிசா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ஹாக்கி இந்தியா ரூ.21 லட்சம் வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக PM Cares Fund என்ற பெயரில் தனி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில அரசுகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தன.

இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஹாக்கி இந்தியா சார்பில் ஒடிசா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், தங்கள் பங்களிப்பை வழங்க ஹாக்கி இந்தியா நிர்வாகக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் ரஜீந்தர் சிங் கூறுகையில், ‘தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஒடிசா அரசு சிறப்பாக செயல்படுகிறது. எங்களது இந்த பங்களிப்பின் மூலம், ஹாக்கி இந்தியாவுக்கு எப்போதும் பெரும் ஆதரவாக இருக்கும் ஒடிசா மக்களுக்கு ஹாக்கி இந்தியாவும் உதவ முடிந்தது’ என்றார்.

இதேபோல் ஹாக்கி இந்தியா சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES Fund) ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News