செய்திகள்
சோனியா காந்தி - பிரதமர் மோடி

மத்திய அரசு செலவை குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2020-04-08 03:28 GMT   |   Update On 2020-04-08 04:31 GMT
கொரோனாவால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், மத்திய அரசு தனது செலவினங்களை குறைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிய பிறகு, அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு ஏற்கனவே 3 கடிதங்கள் எழுதி இருக்கிறார். இந்த நிலையில், மத்திய அரசு தனது செலவினங்களை குறைக்க வேண்டும் என்று கோரி நேற்று அவர் மீண்டும் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் சோனியா காந்தி கூறி இருப்பதாவது:-

கொரோனாவை ஒழிக்கும் போரில் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மிகப்பெரிய தியாகத்தை செய்து வருகிறார்கள். அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் மற்றும் தெரிவிக்கும் யோசனைகள், அறிவுறுத்தல்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். மக்கள் வைத்து இருக்கும் அந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்.

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் எம்.பி.க்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்கும் மத்திய மந்திரிசபையின் முடிவை வரவேற்கிறேன்.

இதேபோல் பட்ஜெட் செலவினங்களையும் 30 சதவீதம் (சம்பளம், ஓய்வூதியம், பொதுத்துறை திட்டங்கள் நீங்கலாக) குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் ஆண்டுக்கு சுமார் ரூ.2½ லட்சம் கோடி வரை மிச்சப்படுத்த முடியும்.

இந்த தொகையை தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் உள்ளவர்களின் நலனுக்காக பயன்படுத்த முடியும்.

ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய கட்டுமான திட்டங்கள், மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களை நிறுத்தி வைக்கலாம். நாடாளுமன்ற கூட்டத்தை தற்போதைய வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்திலேயே நடத்தலாம். புதிய கட்டடம் கட்டுவதற்கான அவசரம் தற்போது இல்லை.

இதன்மூலம் மிச்சமாகும் தொகையை புதிய ஆஸ்பத்திரிகள் கட்டுவது, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தலாம்.

ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை நிறுத்தி வைக்கவேண்டும். தேச நலன் சார்ந்த மற்றும் அவசரமான பயணங்களுக்கு மட்டும் பிரதமர் அனுமதி அளிக்கலாம். (பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயணங்களுக் காக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் செலவான தொகை சுமார் ரூ.393 கோடி).

இப்படி வெளிநாட்டு பயணங்களை நிறுத்தி வைப்பதன் மூலம் கிடைக்கும் தொகையை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம்.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும். இதில் கொரோனா நோய் தடுப்பு, பொது சுகாதாரம் தொடர்பான விளம்பரங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம். கொரோனாவால் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய இந்த தொகை உதவியாக இருக்கும்.

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியில் (‘பிரதமர் கேர்’) உள்ள பணம் முழுவதையும் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அந்த பணம் ஒளிவு மறைவற்ற முறையில், பொறுப்புடன் செலவு செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் சோனியாகாந்தி கூறி உள்ளார்.
Tags:    

Similar News