செய்திகள்
கோப்புபடம்

கொரோனா வைரஸ் 8 மீட்டர் வரை பரவும் - ஆய்வறிக்கையில் தகவல்

Published On 2020-04-02 07:19 GMT   |   Update On 2020-04-02 07:19 GMT
இருமல் தும்மலின் போது கொரோனா வைரஸ் காற்றில் 7 முதல் 8 மீட்டர் தூரம் வரை பரவும் என்று ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. நோய் தொற்றில் இருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு வருபவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன்எச்சரிக்கை வழிமுறைகள் போதுமானவை அல்ல என்று அமெரிக்க மருத்துவக் குழு இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மா.ச.சு.செட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த இணை பேராசிரியர் லிடியா புரூய்பா இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் இருமல், தும்மல் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார். அந்த ஆய்வறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பழமையான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. அவை கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது.

அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேறும் எச்சில் கொரோனா வைரஸ் இருக்கும். அந்த வைரஸ் காற்றில் 7 முதல் 8 மீட்டர் தூரம் வரை பரவும். இது சமீபத்திய ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காற்றில் அந்த வைரஸ் பல மணி நேரங்களுக்கு உயிர் வாழும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News