செய்திகள்
கர்ப்பிணி மனைவியுடன் 100 கி.மீ. நடந்து வந்த வாலிபர்

கொரோனாவால் ஊரை விட்டு வெளியேறி 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் 100 கி.மீ. நடந்து வந்த வாலிபர்

Published On 2020-03-30 07:14 GMT   |   Update On 2020-03-30 07:14 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் வெளியேறிய வாலிபர் கடந்த 2 நாட்களாக சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து மீரட்டை வந்தடைந்தார்.
மீரட்:

உத்தரபிரதேச மாநிலம் புலந்தாகர் என்ற இடத்தை சேர்ந்த வாலிபர் வகீல். இவரது மனைவி யாஸ்மின்.

வகீல் உத்தரபிரதேச மாநிலம் சகரான் பூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். மனைவியையும் அழைத்து சென்றிருந்தார். அவருக்கு தொழிற்சாலை நிர்வாகமே வீடு ஒதுக்கி கொடுத்திருந்தது.

21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து கணவன் - மனைவி இருவரையும் அந்த வீட்டை காலி செய்யும்படி தொழிற்சாலை நிர்வாகம் கூறியது. எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். யாஸ்மின் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஊருக்கு செல்வதற்கு பஸ் நிலையம் வந்தனர். வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் எப்படி செல்வது என்று தெரியவில்லை. எனவே சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என்று முடிவு எடுத்தனர்.

அவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களாக சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து மீரட்டை வந்தடைந்தனர். அவர்கள் கையில் பணம் எதுவும் இல்லை. எனவே சாப்பிடவும் இல்லை.

மிகவும் சோர்வான நிலையில் மீரட் பஸ் நிலையம் அருகே வந்து அமர்ந்தனர். அவர்கள் நிலைமையை அறிந்த உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவ முன் வந்தார்கள். அவர்களாக பணம் வசூலித்து கொடுத்தனர்.

உள்ளூர் சப்-இன்ஸ்பெக்டர் பெரம்பல்சிங்கும் தேவையான உதவிகளை செய்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆம்புலன்சை ஏற்பாடு செய்தார்கள். அதில் இருவரையும் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News