செய்திகள்
டெல்லி - நொய்டா சாலையை மூடிய போலீசார்

தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க மாநில எல்லைகள் சீல்வைப்பு

Published On 2020-03-30 04:37 GMT   |   Update On 2020-03-30 04:37 GMT
புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க மாநில எல்லைகளை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து எல்லைகள் மூடப்பட்டன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து, ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. 

ஆனால், பெரிய நகரங்களில் தங்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஊரடங்கு காரணமாக வேலையிழந்ததால், தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்லத் தயாரானாா்கள். சிலா் தங்கள் குடும்பத்தினருடன் நெடுஞ்சாலைகள் வழியாக நடந்தே சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா். 

இதையடுத்து, புலம் பெயா் தொழிலாளா்களுக்கு உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. எனினும் புலம் பெயா் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு தேவையான வாகன வசதிகளையும் மாநில அரசுகள் செய்து கொடுத்தன. 



புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் இடம்பெயர்வதால் நோய்த்தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் இருந்தது. எனவே, ஊரடங்கின்போது வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம்பெயா்வதைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறிச் செல்வோா் தனி முகாம்களில் 14 நாள்கள் தங்க வைக்கப்படுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தொழிலாளர்களுக்கு தற்காலிக  தங்குமிடங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

வேலை இழந்து தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவர்கடம் வீட்டு வாடகை வேண்டாம் எனவும், வீட்டைவிட்டு சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்றும் சில உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள். 

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையில் தவிக்கின்றனர். 
Tags:    

Similar News