செய்திகள்
கர்நாடகாவில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம்

கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை - கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்

Published On 2020-03-29 07:34 GMT   |   Update On 2020-03-29 07:34 GMT
கொரோனா வைரசை தடுப்பது குறித்து கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
பெங்களூரு:

கொரோனா வைரசால் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவர்கள் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 3 பேர் இந்தநோய்க்கு உயிரிழந்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி முறையை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தற்காலிக மருத்துவ மையங்களை கர்நாடக அரசு அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு வாரமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். காய்கறி, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், கொரோனா வைரசை தடுப்பது குறித்து கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

பெங்களூரு விதான சவுதாவில் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்துக்கு முதல் மந்திரி எடியூரப்பா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News