செய்திகள்
மலுபாய் அக்ரம் அவாலி

கொரோனா குறித்து பேரன் கூறிய தகவல்கள் - அச்சத்தில் ஆற்றில் குதித்து பாட்டி தற்கொலை

Published On 2020-03-29 00:01 GMT   |   Update On 2020-03-29 00:01 GMT
கொரோனா குறித்த தகவல்களை அறிந்த 69 வயது நிரம்பிய பெண் பயம் காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 900-க்கும் மேற்பட்டோர் வைரஸ் பரவியுள்ளது. மேலும் கொரோனா வைரசால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வைரஸ் பரவும் வேகத்தை விட வைரஸ் தொடர்பான பீதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா குறித்து தகவல் அறிந்த பெண் அச்சம் காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் மாவட்டம் ஷிரோலி பகுதியை சேர்ந்த பெண் மலுபாய் அக்ரம் அவாலி (68). இவர் செக்யூரிட்டி வேலை செய்துவரும் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். மலுபாய்க்கு ஒரு பேரன் உள்ளான். 

இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மலுபாயின் மகன் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மகன் வீட்டில் இருப்பதற்கான காரணம் என்ன என்று தனது பேரனிடம் மலுபாய் விசாரித்துள்ளார். 

அப்போது தனது பாட்டி மலுபாயிடம் கொரோனா வைரஸ் குறித்தும் அதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பேரன் விரிவாக கூறியுள்ளான். இந்த தகவலை கேட்ட மலுபாய் வைரஸ் குறித்த அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக  மிகவும் ஆபத்தான முடிவெடுத்த மலுபாய் அக்ரம் அவாலி கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) தனது வீட்டின் பகுதி அருகே ஓடும் பஞ்சகங்கா நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News