செய்திகள்
கோப்புப்படம்

நாடு முழுவதும் 21 நாள் மூடப்பட்டதால் ரூ.9 லட்சம் கோடி வர்த்தகம் இழப்பு

Published On 2020-03-26 04:58 GMT   |   Update On 2020-03-26 04:58 GMT
நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்த 21 நாட்கள் முடக்கத்தால் சுமார் ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் வீட்டிலேயே இருக்கவும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து தொழிற் சாலைகளும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் புதிய முதலீட்டுகளை மேற்கொள்ள நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

இதற்கிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் உள்பட அனைத்து துறைகளும் மேலும் இழப்பை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 21 நாள் முடக்க அறிவிப்பால் இந்தியா முழுவதும் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவால் மேலும் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். ஒட்டு மொத்தமாக இந்த 21 நாட்கள் முடக்கத்தால் சுமார் ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இது உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 1.7 சதவீதம் குறைந்து 7.5 சதவீதமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

வரும் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மேலும் குறுகிய கால கடன் வட்டியை மேலும் 65 அடிப்படை புள்ளிகளாக குறைக்கலாம். இந்த ஆண்டுக்குள் மொத்தம் ஒரு சதவீதம் வட்டியை குறைக்க வாய்ப்புகள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆய்வுகளை இங்கிலாந்தை சேர்ந்த பார்க்லேயாஷ் நிறுவனம் கணித்துள்ளது.

மற்றொரு நிறுவனமான யெமல்கே அளித்துள்ள ஆய்வு அறிக்கையில் பணமதிப்பு வீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரியால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் கடன் சீரமைப்பு நிதி உதவி போன்றவற்றை அறிவிப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து மீள உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதையடுத்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்நாட்டு மற்றும் விமான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. விமானத்துறைக்கு 2020-21 நிதியாண்டில் முதல் காலாண்டில் ரூ.24 ஆயிரத்து 850 கோடியில் இருந்து 27 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று விமான போக்குவரத்து துறை ஆலோசனை அமைப்பான சி.ஏ.டி.ஏ. தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News