செய்திகள்
யெஸ் வங்கி

இதர வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் தவணை செலுத்தலாம் - யெஸ் வங்கி

Published On 2020-03-11 18:53 GMT   |   Update On 2020-03-11 18:53 GMT
ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை செலுத்துவதற்கான ஆர்.டி.ஜி.எஸ். மின்னணு பணபரிமாற்ற சேவை மீண்டும் அனுமதிக்கப்படுவதாக யெஸ் வங்கி நேற்று தெரிவித்தது.
புதுடெல்லி:

நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கி, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை படிப்படியான தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதர வங்கிக்கணக்கில் இருந்து யெஸ் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை ஆகியவற்றை ஐ.எம்.பி.எஸ்., என்.இ.எப்.டி. போன்ற மின்னணு பணபரிமாற்ற சேவை மூலம் செலுத்தலாம் என்று யெஸ் வங்கி ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை செலுத்துவதற்கான ஆர்.டி.ஜி.எஸ். மின்னணு பணபரிமாற்ற சேவை மீண்டும் அனுமதிக்கப்படுவதாக யெஸ் வங்கி நேற்று தெரிவித்தது. இதன்படி, இதர வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை ஆர்.டி.ஜி.எஸ். சேவை மூலம் செலுத்தலாம் என்று கூறியுள்ளது.

யெஸ் வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், வங்கி மூலமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளது. இருப்பினும், பிறருக்கு அளித்த காசோலைகள், நிலைமை சீரடையும்வரை ஒப்புதல் அளிக்கப்பட மாட்டாது என்றும் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. ஏப்ரல் 3-ந் தேதிவரை கட்டுப்பாடுகள் நீடிப்பதால், அந்த காலகட்டத்தில் புதிய கடனோ, முன்தொகையோ வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News