செய்திகள்
பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் - முதல்வர் அறிவிப்பு

Published On 2020-03-10 08:40 GMT   |   Update On 2020-03-10 08:40 GMT
கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை அங்கு மூன்றாயிரத்துக்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
 
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதற்கிடையே, கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி இரு குழந்தைகள் உள்பட 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டதால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 31-ம் தேதிவரை அனைத்து பள்ளிகளுக்கும் ஏழாம் வகுப்பு வரை விடுமுறை அளித்தும் அங்கன்வாடி மற்றும் மதரசாக்களை மூடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

8,9, மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
 
Tags:    

Similar News