செய்திகள்
ஜனாதிபதியிடம் மனு அளித்த காங்கிரஸ் தலைவர்கள்

அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த காங். தலைவர்கள்

Published On 2020-02-27 08:24 GMT   |   Update On 2020-02-27 08:24 GMT
டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற வன்முறை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, டெல்லி வன்முறை தொடர்பாக மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, டெல்லி வன்முறை தொடர்பாக ஜனாதிபதியிடம் அளித்த மனுவில் உள்ள விவரங்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-



4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடின, மத்திய அரசும், மாநில அரசும் பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக, நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத உள்துறை மந்திரியை, உடனடியாக பதவி விலக சொல்லும்படி குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

தலைநகரில் அமைதி நிலவுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மன்மோகன் சிங் வலியுறுத்தினார். 

‘டெல்லியில் கடந்த 4 நாட்களாக நடந்த சம்பவம் மிகுந்த கவலைக்குரியது மற்றும் தேசிய அவமானம். இது மத்திய அரசின் ஒட்டுமொத்த தோல்வியின் பிரதிபலிப்பு ஆகும். ராஜ தர்மத்தை மத்திய அரசுக்கு நினைவூட்டுமாறு ஜனாதிபதியைக் காங்கிரஸ் கேட்டுக்கொண்டது’ என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
Tags:    

Similar News