செய்திகள்
மான்டேக்சிங்

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை- மான்டேக்சிங்

Published On 2020-02-17 06:10 GMT   |   Update On 2020-02-17 10:07 GMT
இப்போதைய வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மான்டேக்சிங் அலுவாலியா கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணரும், திட்டக்கமி‌ஷன் முன்னாள் துணைத்தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா இந்திய பொருளாதாரம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு 2024-25 நிதியாண்டில் 5 டிரில்லியன் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டுவோம் என்று கூறியிருக்கிறது. அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

நாட்டின் வளர்ச்சி விகிதம் இப்போதைய நிலவரப்படி 9 சதவீதம் வரை இருந்தால் தான் அந்த இலக்கை எட்ட முடியும். ஆனால் தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சி விகிதத்திலேயே நாடு சென்று கொண்டிருக்கிறது.

வேண்டுமானால் அடுத்ததாக 5-லிருந்து 6 சதவீதத்திற்குட்பட்ட வளர்ச்சியையே எட்டலாம். படிப்படியாக இதன் வளர்ச்சி அதிகமாகி பிற்காலத்தில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு.

மத்திய அரசு சொல்லியபடி 2024-25-ம் நிதியாண்டுக்குள் எட்டுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. இப்போது 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சி நிலவரம் சற்று அதிகரித்து அடுத்த ஆண்டில் 5 ஆண்டுக்கு மேல் செல்லலாம் என்று நான் கூட கூறியிருந்தேன்.

இதுபோதாது. விரைவான வளர்ச்சி குறிப்பாக 8 சதவீதத்திற்கு மேலான வளர்ச்சி நமக்கு இப்போது தேவை. அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

முதலீடுகள், மக்கள் வாங்கும் சக்தி போன்றவற்றை அதிகரிப்பதற்கான செயல்பாடுகள் ஊக்கப்படுத்துவதாக இல்லை. இந்த பட்ஜெட்டில் கூட அதற்கு சரியான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

முதலீடு மற்றும் ஏற்றுமதி விவகாரங்களில் இன்னும் வேகம் தேவைப்படுகிறது. அதை செய்யவில்லை. வங்கிகள் கடன் கொடுப்பது குறைந்துவிட்டது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக அவர்கள் கடன் கொடுப்பது இல்லை.

இதனால் முதலீடு செய்ய முடியாத நிலை தொழிலதிபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நமது வரி வசூல் நடைமுறை மற்றும் சட்டங்கள் பல்வேறு சிக்கல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. பல வி‌ஷயங்கள் சட்டவிரோத செயல்களாக காட்டப்படுகின்றன.

எனவே தொழில் முதலீடுகள், தொழில்களுக்கு ஊக்குவிப்பு தன்மை குறைந் திருக்கிறது. இவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் களையப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

பணமதிப்பிழப்பு திட்டம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்தி கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அதிகபட்சமாக 8.4 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி இருந்தது. அதற்கு முந்தைய காலங்களில் இத்தகைய வளர்ச்சி இருந்தது இல்லை.

முந்தைய பிரதமர் நரசிம்ம ராவ், அதைத்தொடர்ந்து மன்மோகன்சிங் போன்றவர்கள் எடுத்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பாக உதவின.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களை உருவாக்கினார். குறிப்பாக தனியார் மயம் திட்டங்களில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் சிறப்பாக இருந்தன.

தற்போதைய நிலையில் தனியார் முதலீடும் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. அதை சரிபடுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரி அமலில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இன்னும் அதில் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டும்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு இன்னும் ஏராளமான பணிகளையும் மாற்றங்களையும் செய்தாக வேண்டும். 8 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை கண்டறிந்து அதை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதுடன் ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News