செய்திகள்
பிரதமர் மோடி

நரேந்திர மோடி பிரதமர் போல் நடந்துகொள்வதில்லை - ராகுல் குற்றச்சாட்டு

Published On 2020-02-07 11:07 GMT   |   Update On 2020-02-07 11:07 GMT
நரேந்திர மோடி ஒரு பிரதமர் போல நடந்துகொள்வது இல்லை என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். 

அவர் தனது உரையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 ரத்து, முத்தலாக், ராமஜென்ம பூமி, இந்திய-வங்கதேச நில ஒப்பந்தம், கர்த்தார்பூர்-சாஹிப் வழித்தடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார்.
 
பிரதமர் மோடியின் உரையின் இடையே குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உங்கள் அரசு (பாஜக) என்ன திட்டம் உருவாக்கியுள்ளது? என கேள்வி எழுப்பினார். 

அப்போது பிரதமர் மோடி ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக, ‘‘நான் 30-40 நிமிடங்களாக பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் மின்சாரம் வர நீண்ட நேரமாகி விட்டது. பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கின்றன’’ என்று கூறினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.



இதற்கிடையில், மக்களவை இன்று கூடியபோது பிரதமர் மோடியின் 'டியூப் லைட்’ விமர்சனம் குறித்தும் வேலைவாய்ப்பு குறித்தும் ராகுல் காந்தி பேச முற்பட்டார். 

அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர் ஹர்ஷ்வர்த்தன் ராகுல்காந்தி மீது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால், எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படது.

இந்நிலையில், மக்களவையை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது:

'சாதாரணமாக நாட்டின் பிரதமருக்கு என தனி மதிப்பு, தன்மை, பண்பு உண்டு. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதில் எதுவுமே இல்லை. நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் போல நடந்து கொள்வதே இல்லை. 

பாராளுமன்றத்தில் நாங்கள் (எதிர்கட்சிகள்) பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் (பாஜக) எங்கள் குரலை ஒடுக்குகின்றனர். அரசை எதிர்த்து நான் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவே இன்று பாராளுமன்றத்தில் திட்டமிட்டு பாஜக அமளியில் ஈடுபட்டுள்ளது. 

நாட்டில் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் பிரதமர் மோடி விழிபிதுங்கி நிற்பதை நாட்டு இளைஞர்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். 

வேலையில்லா திண்டாட்டம் குறித்த பிரதமர் என்னுடன் விவாதத்தில் ஈடுபடுவதில் இருந்து அவரை காப்பாற்றவே பாஜக இன்று பாரளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News