செய்திகள்
அமில தொழிற்சாலையில் விஷவாயு கசிவின் போது மீட்பு பணியில் பணியாளர்கள்

உத்தரபிரதேசத்தில் வி‌‌ஷவாயு கசிந்து 7 பேர் பலி

Published On 2020-02-06 21:53 GMT   |   Update On 2020-02-06 21:53 GMT
உத்தரபிரதேசத்தில் அமில தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூரில் அமில (ஆசிட்) தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள டேங்கரை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது. அப்போது திடீரென வி‌‌ஷவாயு கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அந்த பகுதி முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் அருகே உள்ள தரை விரிப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. வி‌‌ஷவாயு கசிவு தொடர்ந்ததால், அங்கிருந்த 7 பேர் மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேரும் அடங்குவர்.

கியாஸ் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை சுற்றிலும், சில நாய்களும் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த துணை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்தனர். தேசிய மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை நடத்த லக்னோவில் இருந்து நிபுணர்கள் குழு வந்துள்ளதாகவும், விசாரணைக்கு பின்னர் 7 பேர் உயிரிழந்ததற்கான முழு விவரங்கள் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பலியான 7 பேரும் கான்பூரை சேர்ந்தவர்கள் என்பதும், தரை விரிப்பு தொழிற்சாலையில் அவர்கள் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.


Tags:    

Similar News