செய்திகள்
டெல்லி வந்தடைந்த இந்தியர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - சீனாவில் இருந்து 2வது கட்டமாக 323 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்

Published On 2020-02-02 03:20 GMT   |   Update On 2020-02-02 08:05 GMT
கொரோனா வைரஸ் பரவி வரும் சீனாவின் வுகான் நகரில் இருந்து 2வது கட்டமாக 323 இந்தியர்கள் மீட்கப்பட்டு, தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அந்நாட்டில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. 
 
இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முக கவசம், உணவு உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு உருவாகி இருப்பதால் இந்தியர்களை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது. 

அதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் சீனாவுக்கு புறப்பட்டது. வுகான் நகரில் இருந்து முதல் கட்டமாக 324 இந்தியர்களை அழைத்துக்கொண்டு வந்த முதல் விமானம் நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது.

இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் தங்கியுள்ள மேலும் 323 இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியாவின் போயிங் 747 இரண்டாவது விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் 323 இந்தியர்களுடன் இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைகிறது. மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரும் இந்த விமானத்தில் வந்திருந்தனர்.

 அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பது குறித்து டெல்லி விமான நிலையத்தில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை செய்ய உள்ளனர்.

இதற்காக விமானம் தரையிறங்க உள்ள ஓடுபாதையின் ஓரத்திலேயே முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் சிறப்பு முகாமில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளனர். இந்த  சிறப்பு முகாமில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. 
Tags:    

Similar News