செய்திகள்
ராகுல் காந்தி

உங்கள் பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடனை மோடி தள்ளுபடி செய்தார்- ராகுல் காந்தி

Published On 2020-01-28 11:19 GMT   |   Update On 2020-01-28 11:19 GMT
2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்:

நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை முன்னிறுத்தி ராகுல் காந்தி தலைமையில் இன்று ‘யுவா ஆக்ரோஷ்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

எல்லா நாடுகளுக்கும் ஒரு முதன்மை பலம் உள்ளது. அமெரிக்காவுக்கு பலமாக இராணுவம் உள்ளது. சவூதி அரேபியாவிற்கு எண்ணெய் வளம் உள்ளது. அதே போல் இந்தியாவிற்கு பலமாக கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஆனால் வேதனையான விஷயம் என்னவென்றால் 21ம் நூற்றாண்டின் இந்தியா அதன் முதன்மை பலத்தை வீணடிக்கிறது. இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி முதலீட்டாளர்களை தடுத்து விட்டார் பிரதமர் மோடி.

2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி பற்றி மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் பையில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார் மோடி. இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்களே, உங்கள் குரல் ஒடுக்கப்பட அனுமதிக்காதீர்கள். வேலைவாய்ப்பின்மையை எதிர்த்து கேள்வி கேளுங்கள்.

இவ்வாறு ராகுல் பேசினார். 

Tags:    

Similar News