செய்திகள்
மைக்கேல் லெவிட்

சுற்றுலா பயணியை படகில் சிறை வைத்த விவகாரம்- கேரளாவில் 4 பேர் கைது

Published On 2020-01-10 04:46 GMT   |   Update On 2020-01-10 04:46 GMT
நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டவரை கேரளாவில் படகில் சிறைவைத்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்:

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் மைக்கேல் லெவிட் (வயது72). இவர் வேதியியலில் கடந்த 2013-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். இவர் கேரள பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக கொச்சிக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார். 

நேற்று முன்தினம் ஆலப்புழாவில் படகு சவாரி செல்வதற்காக மைக்கேல் லெவிட், அவரது மனைவி மற்றும் சிலர் சென்றனர். அவர்கள் அனைவரும் படகில் உல்லாச பயணம் மேற்கொள்வதற்காக படகில் ஏறி அமர்ந்தனர்.



அப்போது கேரளாவில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் இந்த படகு தளத்துக்கு வந்து படகை இயக்க கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள். இதனால் மைக்கேல் லெவிட் அவரது மனைவியுடன் படகிலேயே 5 மணி நேரம் தவித்தார். அதன் பிறகே அவர் படகு சவாரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 

கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால் அதை மீறி நோபல் பரிசு பெற்றவர் படகில் சிறை வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

பொது வழியில் தடங்கல், சட்டத்திற்கு புறம்பாக சிறைவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News