search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோபல் பரிசு"

    • எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
    • அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார்

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

    ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

    இதற்கிடையில், நார்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று அவர் தெரிவித்தார். 

    • 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கிகளால் பயனடைந்தனர்
    • 170 உலக பிரபலங்கள் அவர் சார்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினர்

    வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) என்பவர், 1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.

    2022 ஜனவரி மாத காலகட்டத்தில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கியால் பயனடைந்தனர்.

    தற்போது 83 வயதாகும் முகமது யூனுஸ், வங்காள தேசத்தில் லாப நோக்கமற்ற (not-for-profit) சேவை உணர்வோடு கிராமின் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக யூனுஸ் மற்றும் 3 பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டின் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    2023 ஆகஸ்ட் மாதம் உலகளாவிய பிரபலங்கள் 170 பேர் பேராசிரியர் யூனுஸ் மீதான சட்டரீதியான தாக்குதலை நிறுத்துமாறு வங்காள தேச பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    விசாரணை நிறைவுற்ற நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பேராசிரியர் முகமது யூனுஸ் மற்றும் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 6 மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

    "எந்த விதிமுறைகளுக்கும் பொருந்தாத தீர்ப்பு இது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை" என பேராசிரியர் யூனுஸ் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

    வங்காள தேச பிரதமர் ஹசினா ஷேக் (Sheikh Hasina) ஒரு முறை, "பேராசிரியர் யூனுஸ், ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்" என கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
    • மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது.

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி கடந்த 2ம் தேதி முதல் தொடங்கியது.

    ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
    • சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

    "தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

    "மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

    1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

    • தகுதியுடையவர்களை இந்நிறுவனத்தின் 50 பேராசிரியர்களை கொண்ட குழு தேர்வு செய்யும்
    • விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

    இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

    இந்த வருட மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கட்டாலின் கரிக்கோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு வழங்கப்படுவதாக இந்த குழு அறிவித்துள்ளது.

    இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

    மனிதர்களின் மரபணு கூறுகள், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினை கண்டறிய இந்த இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பெரிதும் உதவியது. அதன் மூலம் உலகையே அச்சுறுத்தி வந்த கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை பெருமளவு தயாரிப்பது எளிதாக அமைந்தது.

    இவ்வாறு நோபல் அசெம்பிளி அறிவித்துள்ளது.

    விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிர்வேதியியல் துறையை சேர்ந்த 68 வயதான ஹங்கேரிய அமெரிக்க விஞ்ஞானியான கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

    அமெரிக்க வேதியியல் விஞ்ஞானியான 64 வயதான ட்ரூ வைஸ்மேன், மரபணு ஆராய்ச்சிக்கான பென் இன்ஸ்டிட்யூட் (Penn Institute) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    மருத்துவ துறைக்கு இவ்விருதுகள் வழங்கப்பட தொடங்கிய 1901 வருடத்திலிருந்து இதுவரை 113 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவற்றில் 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். உக்ரைன் மீதான போர் மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய ரஷியா எதிர்ப்பது ஆகியவை காரணமாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நோபல் அறக்கட்டளை திரும்ப பெற்றுள்ளது.

    • மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளை தொடர்ந்து பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு.
    • வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ஸ்டாக்ஹோம்:

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    • எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார்.
    • 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது.

    ஸ்டாக்ஹோம்:

    2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும்.

    • மருத்துவம், இயற்பியல் துறைகளை தொடர்ந்து வேதியியல் துறைக்கு நோபல் பரிசு.
    • மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு.

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல்  மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

    • குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு.
    • பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது

    தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்க விஞ்ஞானி ஜான் எஃப். கிளாசர் மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன் ஜீலிங்கர் ஆகியோர் நடப்பாண்டிற்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் குறித்து ஆய்வு செய்தார் ஸ்வான்டே பாபோ
    • மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு

    2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டேவிட் டிரிம்பிள் வழங்கப்பட்டது.
    • அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என போற்றப்படுபவர்.

    லண்டன்:

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல் மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார் (77). அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளனர் என டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    டேவிட் டிரிம்பிளின் முயற்சியால் 1998-ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும், அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார்.

    பெல்பாஸ்ட் பகுதிகளில் 30 ஆண்டாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3,600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த டேவிட் டிரிம்பிள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×