என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: அமைதி முதல் இலக்கியம் வரை.. நோபல் பரிசுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆண்டு
- பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும்.
- அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வைக்காக வழங்கப்பட்டது.
டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் ஆல்ஃபிரட் நோபல் தனது கண்டுபிடிப்பு மனிதர்களை கொல்ல பயன்படுத்துவது குறித்து வருத்தமடைந்து தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு 1895-இல் நிறுவியதே நோபல் பரிசு. 1896 இல் அவரது மறைவுக்கு பின் அவரின் உயிலின்படி 1901 தொடங்கி வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது உலகின் உயரிய அங்கீகாரமாகக் உருவெடுத்துள்ள நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
அந்த வகையில், இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.
மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.
குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.
உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.
László Krasznahorkai
2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர், பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.
இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ -வுக்கு வழங்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.
முன்னதாக இந்த வருடம் 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வந்தபோதும் அவருக்கு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.






