செய்திகள்
பேரணி சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தும் காட்சி.

ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

Published On 2020-01-09 17:25 GMT   |   Update On 2020-01-09 17:25 GMT
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.  இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி  உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் பெரும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தில் வன்முறை நடந்து 4 நாட்கள் ஆகியுள்ள போதிலும், மேற்கூறிய தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், டெல்லி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் தொடர்புடையவர்கள் பிடிபடுவார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என, அந்த பல்கலைகழக மாணவர்கள் இன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். 

இந்த பேரணியில், சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். அங்கு அதிகாரிகளுடன் மாணவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைதொடர்ந்து, மாணவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். 

இதனை போலீசார் தடுத்து நிறுத்த, மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரணி சென்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News